பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழாவில்100 ஆடுகளை வெட்டி 2000 பேருக்கு கறி விருந்து

*ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் நடந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 100 ஆடுகளை வெட்டி 2000 பேருக்கு மேல் கறி விருந்து வழங்கப்பட்டது. பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது சடையாண்டி கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் எழுந்தருளும் சடையாண்டிசாமி இவ்வூரின் காவல் தெய்வமாக இப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா கொண்டப்படுகிறது.

மும்மாரி மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் சாமியிடம் தங்களது குறைகளை தீர்க்க வேண்டி கொள்கின்றனர். இதற்கு நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் சுமார் 100 ஆடுகளை சிறப்பு பூஜைக்குப்பின் வெட்டி சமையல் செய்து பிரசாதமாக ஆண்களுக்கு மட்டும் கறிவிருந்து நடக்கும் ஒரு நாள் திருவிழா இது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி பெட்டி தேவரப்பன்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது, அதன்பின் சாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக மருதாநதி கரையோரம் அமைந்துள்ள சடையாண்டி கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு சாமி பெட்டிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சமைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சடையாண்டி சாமிக்கு படையலிடப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களுக்கு இலை போட்டு கறி விருந்து நடைபெற்றது. இத்திருவிழாவில் அய்யம்பாளையம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர். இத்திருவிழா முடிந்ததும் அய்யம்பாளையம் ஊர்மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் முத்தாலம்மன் கோயில் திருவிழா அக்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Related Stories: