15 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: மாநில அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் 15 எம்.எல்.ஏ.க்களின் எதிர்க்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்த ரமேஷ்குமார் முதல்கட்டமாக 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இரு தினங்கள் கழித்து மீதமுள்ள 14 எம்.எல்.ஏ.க்களை அப்பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார்.

இந்நிலையில், மேற்கண்ட 17 பேரின் தொகுதிகளில் ஆர்.ஆர்.நகர் மற்றும் மஸ்கி தொகுதிகள் நீங்கலாக மற்ற 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தங்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 17 மாஜி எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உடனடியாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்தடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இறுதியாக இன்று இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 15 பேர் சார்பில் தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.  15 பேரின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் வழக்கு என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: