ஒரு வாரத்துக்குள் சந்திரபாபு நாயுடு வீட்டை காலி செய்யாவிட்டால் இடித்து அகற்றப்படும் என நோட்டீஸ்

திருமலை: ‘‘ஒரு வாரத்துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் இடித்து அகற்றப்படும்’’ என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் லிங்கமனேனி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா நதிக்கருகே தனியார் கெஸ்ட் ஹவுசில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் முதல்வராக இருந்தபோது மாநில முதல்வர் என்ற வகையிலும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையிலும் தற்போதைய ஆந்திர அரசு சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீட்டிற்கான வாடகையை செலுத்தி வருகிறது. இந்நிலையில், சந்திரபாபு வசிக்கும் வீடு உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட கெஸ்ட் ஹவுஸ்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என கூறி ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அமராவதி தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் சந்திரபாபு வசிக்கும் வீடு உட்பட அந்த பகுதியில் உள்ள 30 வீடுகளுக்கு உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. நேற்று காலை சந்திரபாபு வசிக்கும் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும். தவறினால் கெடு முடிந்த உடன் வீடு இடிக்கப்படும் என்று அவரது வீட்டில் நோட்டீசை ஒட்டியுள்ளனர். கடந்த மாதம் கர்நாடகாவில் பெய்த மழைகாரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சந்திரபாபு தங்கியிருந்த வீட்டின் அருகே வரை கிருஷ்ணா நதிநீர் வந்தது. இதனால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

Related Stories: