திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு குரேஷி பெயர் பரிந்துரை: முடிவை மாற்றியது கொலிஜியம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி அகில் குரேஷி பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி அகில் குரேஷி பெயரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த மே மாதம் பரிந்துரை செய்தது. ஆனால், இதை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. நீதிபதி அகில் குரேஷியின் பதவி உயர்வு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது பற்றி உச்ச நீதிமன்றத்தில் குஜராத் உயர் நீதிமன்ற வக்கீல் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை கடந்த 16ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அறிவிப்பை கொலிஜியம் விரைவில் வெளியிடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் நேற்று திடீரென பரிந்துரை செய்தது. இது தொடர்பான அறிவிப்பு, உச்ச நீதிமன்ற வெப்சைட்டில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது. மத்திய அரசு தெரிவித்த தயக்கத்தால், கொலிஜியம் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது.

 

Related Stories: