நீதிமன்றத்துக்கு மக்கள் செல்ல முடியாத அளவுக்கு காஷ்மீர் நிலைமை மோசமாக இல்லை : உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘ஐம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு மக்கள் செல்ல முடியாத அளவுக்கு, அங்கு நிலைமை மோசமாக இல்லை,’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஷ்மீரில் குழந்தைகள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுகின்றனர் என குழந்தைகள் உரிமை அமைப்பை சேர்ந்த இனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் உசேபா அகமதி கடந்த 16ம் தேதி வாதிடுகையில், ‘காஷ்மீர் மக்களால் தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றத்துக்கு கூட செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கெடுபிடி உள்ளது,’ என குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து,  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்றம் இது பற்றி அறிக்கை கேட்டது. அதற்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பியுள்ள அறிக்கையில், ‘உயர் நீதிமன்றத்துக்கு மக்கள் வருவதில் எந்த கெடுபிடியும் இல்லை,’ என கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வக்கீல் அகமதியிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து நாங்கள் அறிக்கை பெற்றுள்ளாம். அது, நீங்கள் தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக இல்லை. குழந்தைகள் கைது செய்யப்படுவது குறித்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறுவர் நீதி குழு ஒரு வாரத்துக்குள் அறிக்கை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது,’’ என்றனர்.

இதேபோல், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்புதான், பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால், அவர் வசிக்கும் வீடே சிறையாக மாற்றப்பட்டு, அவர் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல், மாநிலம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி  உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related Stories: