துண்டு சீட்டு வியாபாரியிடம் மாமூல் வேட்டை குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை

அதிகரித்துள்ளது. பெட்டிக்கடைகள், டீ கடைகளிலும் துண்டு சீட்டில், நம்பரை எழுதி கொடுத்து கேரளாவில் முதல் பரிசு விழும் நம்பரின் கடைசி 4 நம்பர், 3 நம்பர் என்ற அடிப்படையில் பணம் கொடுக்கிறார்கள். தொழிலதிபர்கள், அரசு ஊழியர்களில் தொடங்கி கூலி தொழிலாளிகள் வரை துண்டு சீட்டு விற்பனை கடைகளில் காத்து கிடக்கிறார்களாம். லாட்டரி டிக்கெட் என்று விற்பனை செய்தால் தான் லாட்டரி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். துண்டு சீட்டில் நம்பர் எழுதி கொடுக்கிறவங்களை எப்படி கைது செய்ய முடியும் என்ற நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் ெகாண்ட ஏட்டுகள், எஸ்.ஐக்கள் சிலர், துண்டு சீட்டு வியாபாரிகளிடம் மாதந்ேதாறும் மாமூல் வசூலிக்க தொடங்கி உள்ளனர். 30 ஆயிரம் வரைக்கும் மாமூல் கொடுக்கும் வியாபாரிகளும் இருக்கிறார்களாம். இதை மோப்பம் பிடித்த போலீஸ் அதிகாரிகள் சிலர், எங்களுக்கும் மாமூல் வாங்கி கொடுங்கய்யா? என எஸ்.ஐ.க்கள், ஏட்டுக்களை நச்சரிக்க தொடங்கி உள்ளார்களாம்.

Advertising
Advertising

ஓசி டின்னர்... தொடரும் காக்கி தர்பார்...!

தமிழகத்தில் பொதுவாக அரசுத்துறை நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், சொந்த மாவட்டம் அல்லது சொந்த நகரங்களில் பணியமர்த்தப்பட மாட்டார்கள். ஓய்வுபெறும் வயது நெருங்கும்போது கடைசி ஒரு வருடம் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். ஆனால், கோவை மாநகர காவல்துறையில் ஒரு அதிகாரிக்கு, உள்ளூரில், அதுவும் அவர் வசிக்கும் ஏரியாவில் உள்ள காவல்நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அடிக்கடி தனது குடும்பத்துடன் இரவுநேர டின்னருக்கு செல்கிறார். சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பும்போது, ‘சார் பில்...’ என சர்வர் கொண்டு வருவதுண்டு. ஆனால், அந்த அதிகாரியோ, அந்த பில்லை கையில் வாங்காமல், முறைத்து பார்த்துவிட்டு, போலாம் ரைட்... என கூறிவிட்டு, நடையை கட்டி விடுகிறார். பலமுறை குடும்பத்தோடு ஓசி டின்னருக்கு செல்வதால், ஓட்டல் முதலாளி செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். இந்த விவகாரம் விரைவில் வெடிக்கும் என்கிறார்கள் நேர்மையான காவல் அதிகாரிகள்.

மாதம் 10 பவுன் டார்கெட்...!

காவல் நிலையங்களில், சிவில் வழக்கு தொடர்பான புகார் மனுக்களை விசாரிக்கக்கூடாது என டிஜிபி தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், கோைவ மாநகர காவல்துறையில் சில ஆய்வாளர்கள், சிவில் வழக்கு தொடர்பான புகார் மனுக்களை விரும்பி விசாரிக்கிறாங்க... இதில் ஒரு ஆய்வாளர், ரொம்பவே அலார்ட்டாக உள்ளார். சிவில் விவகாரம் தொடர்பான புகார் மனு ஏதாவது வந்தால், அதை விடுவதில்லை. இருதரப்புக்கும் தனித்தனி ஆள் அனுப்பி, காவல்நிலையத்துக்கு வரவழைத்து விடுகிறார். ‘வாங்க... உட்கார்ந்து பேசுவோம்...’ என ஆரம்பித்து, ஒரு சிட்டிங்... இரண்டு சிட்டிங்... என பல சிட்டிங்... போட்டு, சமாதானமாக பேசி முடித்து விடுகிறார். இப்படி பேசி முடித்த பிறகு, கணிசமான ஒரு பெரும் தொகையை கமிஷனாக பெற்றுவிடுகிறார். இப்படி பெறும் கமிஷன் தொகையில், மாதம் 10 பவுன் தங்க நகை வாங்கவேண்டும் என்பது இவரது டார்கெட். தங்கம் விலை ஏறுவதற்கு இதுதான் காரணம் போலிருக்கே... என்கிறார்கள் சில அதிகாரிகள்.

கண்டுகொள்வார் யாருமில்லை, தட்டி எடு கடைசி வரை...!

திருப்பூர் மாவட்ட காவல்துறையில், 6 உட்கோட்டங்களில் மொத்தம் 45 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சட்டம்-ஒழுங்கு பிரிவில் 331 போலீசார் உள்ளனர். எஸ்எஸ்ஐ 109 பேர், தலைமை காவலர்கள் 151 பேர், முதல்நிலை போலீசார் 288 பேர் பணிபுரிகின்றனர். ஆயுதப்படை பிரிவில் 350 போலீசார், மதுவிலக்கு பிரிவில் 30 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், சுமார் 75 சதவீதம் பேர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு பணிபுரியும் இடமே சொந்தஊர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை இங்கு அமோகமாக நடக்கிறது. 24 மணி நேர மதுபான விற்பனை, சீட்டாட்ட கிளப் ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லை. மணல் மாபியாக்கள் அட்டகாசம் இன்னொரு பக்கம். இப்படி சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை, தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, இங்குள்ள போலீசார் கரன்சி மழையில் நனைகின்றனர். அதனால், வேறு ஊர்களுக்கு இடமாறுதலாகி செல்வதில்லை. சப்-டிவிசன் டிஎஸ்பி முதல் கடைக்கோடி கான்ஸ்டபிள் வரை எல்லோரும் செல்வ செழிப்பில் திளைப்பதால், டிரான்ஸ்பர் என்றால் என்ன? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ‘’கண்டுகொள்வார் யாருமில்லை, தட்டிஎடு கடைசிவரை...’’ என வசூல் தட்டிஎடுக்கின்றனர்.

Related Stories: