கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஒக்கலிக சமூதாயத்தினர் பேரணி: பெங்களூரு ஸ்தம்பித்தது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் மற்றும் ஒக்கலிக சமூதாயத்தினர் பேரணியில் ஈடுபட்டதால் பெங்களூரு ஸ்தம்பித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதே வழக்கில் டி.கே.சிவக்குமாரின் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் சிவக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ஒக்கலிகா சமூதாயத்தினர் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ண பைரே கவுடா, சவும்யா ரெட்டி, தினேஷ் குண்டுராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாலுவாரய ஸ்வாமி, நரேந்திர ஸ்வாமி, பாலகிருஷ்ணா, முன்னாள் எம்.பி. வி.எஸ் உக்ரப்பா உள்ளிட்டோர் இப்பேரணியில் உரையாற்றினர்.

Advertising
Advertising

இதில் பேசிய ஒக்கலிகா சங்க நிர்வாகிகள், தங்களது சமூகத் தலைவர்களை மோடி, அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து குறிவைத்தால் உரிய பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய கல்லூரியில் இருந்து சுதந்திர பூங்கா நோக்கி அனைவரும் பேரணியாக சென்றனர். பெங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி செல்வதால் பசவனக்குடி, ஜே.சி.சாலை, மைசூர் பேங்க் சர்க்கிள், மினர்வா சர்க்கிள், நேஷனல் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், பசவனக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பேரணியை ஒட்டி அசம்பாவிதங்களை தடுக்க கர்நாடகா சிறப்பு ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் மினர்வா சர்க்கிள் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: