அடுத்த உலகக்கோப்பை போட்டியில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக புதிய விக்கெட் கீப்பரை மாற்றுவது அவசியம்: கெளதம் கம்பீர் கருத்து

புதுடெல்லி: வரும்காலத்தில் இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது என்றும், விக்கெட் கீப்பிங்கில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக வேறொருவரை இந்திய அணி அறிமுகப்படுத்தவேண்டும் என முன்னாள் இந்தியா அணி வீரரும், தற்போதைய பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக அவர் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவர் மற்ற வீரர்களைப் போல சமீபத்திய பார்ம் அடிப்படையில் அணியில் இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் என்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், எம்.எஸ்.டோனி ஓய்வு குறித்து கெளதம் கம்பீர் பேசுகையில், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெளியேறியதில் இருந்து எம்.எஸ்.தோனி பற்றிய பேச்சுக்களும், கருத்துக்களும் அதிகம் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த உலக கோப்பை போட்டிக்கு புதிய விக்கெட் கீப்பரை உருவாக்குவது மிகவும் முக்கியம் என கம்பீர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமென்வெல்த் தொடரில் நான், சச்சின், சேவாக், ஆகியோர் விளையாட முடியாது என அப்போது கேப்டனாக இருந்த தோனி கூறியிருந்தார். அங்குள்ள மைதானங்கள் பெரியது என்பதால், இளம் வீரர்களே சரியாக இருப்பார்கள் என்று கூறினார். தற்போது, இது தோனிக்கும் பொருந்தும் என கம்பீர் கூறியுள்ளார். மேலும், ரிஷாப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது விக்கெட் கீப்பராக இருக்கும் திறமை கொண்ட நபரை புதிய விக்கெட் கீப்பராக மாற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: