கர்நாடகாவில் சபாநாயகர் முன்பு 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆஜர்: பரபரப்பான சூழ்நிலையில் இன்று பேரவை கூடுகிறது

பெங்களூரு: கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 10 பேரும், உச்ச நீதிமன்ற உத்தரப்படி சபாநாயகர்  முன்னிலையில் நேற்று மாலை ஆஜராகி, மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களின் ராஜினாமா கடிதம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, சபாநாயகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  நடந்து வருகிறது. கூட்டணி மீது அதிருப்தி அடைந்து 16 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா  செய்தனர். இவர்கள் மும்பையில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளனர்.  கடந்த செவ்வாய்க்கிழமை, ராஜினாமா செய்த எம்எல்ஏ.க்களின் கடிதத்தை பரிசீலனை  செய்த சபாநாயகர் ரமேஷ் குமார்,  5 பேரின் கடிதத்தை மட்டும் ஏற்றார். மற்றவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்தார். நேரில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதையேற்று எம்எல்ஏ ரோஷன் பெய்க் மட்டும் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Advertising
Advertising

இதனால் மும்பையில் தங்கியிருந்த எம்எல்ஏ.க்கள் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ்  ஜார்கிஹோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், எஸ்.டி.சோமசேகர்,  சிவராஜ்ஹெப்பார், மகேஷ்குமட்டஹள்ளி, கே.கோபாலையா, எச்.விஸ்வநாத்,  நாராயணகவுடா ஆகியோர், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனு நேற்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்  முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘‘எம்எல்ஏ.க்கள் சுய விருப்பத்துடன் பதவியை  ராஜினாமா செய்துள்ளனர். இதில், அரசியல் கட்டாயம் துளியுமில்லை. இவர்களின்ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுப்பது சட்டத்திற்கு புறம்பானது,’’ என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவில், ‘‘ராஜினாமா செய்துள்ள 10 எம்எல்ஏ.க்களும் இன்று(நேற்று) மாலை 6 மணிக்குள்  சபாநாயகர் முன் ஆஜராகி, தங்களின் ராஜினாமா விருப்பத்தை நேரில் தெரிவிக்க வேண்டும். அதன் மீது சபாநாயகர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாநாயகர் முன் ஆஜராகும்  எம்எல்ஏ.க்களுக்கு கர்நாடகா டிஜிபி முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் உடனடியாக மனுத் தாக்கல்  செய்தார், அதில், ‘எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று உடனடியாக முடிவு  தெரிவிக்கும்படி சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ராஜினாமா கடிதத்தை பரிசீலிக்க அவகாசம்  தேவைப்படும். எனவே, எனக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதை ஏற்க  மறுத்த உச்ச நீதிமன்றம், எம்எல்ஏ.க்கள் வழக்குடன் சேர்த்து அவருடைய மனுவும் நாளை(இன்று) விசாரிக்கப்படும் என தெரிவித்தது..

இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்று மாலை விமானத்தில் பெங்களூரு வந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 10 பேரும், விதானசவுதாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபாநாயகர்  ரமேஷ் குமார் முன் ஆஜராகினர். அவர்கள் தனித்தனியாக தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா  கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்ட சபாநாயகர்,

* நீங்கள் எல்லாம் சுய விருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா  செய்கிறீர்களா?

* யாராவது வற்புறுத்தி கொடுக்கிறீர்களா?

* ராஜினாமா செய்ய வேறு ஏதாவது காரணம் உள்ளதா?

* தொகுதி மக்கள் உங்கள் செயலை ஏற்றுக் கொள்வார்களா?

* ராஜினாமா செய்வதால் இடைத்தேர்தல் வருமே, இது  கூடுதல் செலவு என்பதை உணர்கிறீர்களா?

* ராஜினாமா கொடுக்கும்படி யாராவது பணம், பொருளாசை காட்டினார்களா?

* இப்போதும் அவகாசம் கொடுக்கிறேன். ராஜினாமாவை  வாபஸ்  பெற்றுக் கொள்கிறீர்களா?

என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். இதை கேட்ட அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அனைவரும், ‘நாங்கள் சுயமாகதான் ராஜினாமா செய்கிறோம். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்றனர்.அதற்கு பதிலளித்த சபாநாயகர்,  ‘‘கேட்டவுடன்  அங்கீகரிக்க முடியாது. சட்ட விதிமுறைகள்படி நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார். அதை தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏ.க்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும்  மும்பை சென்றனர். இதனால், கர்நாடகாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

பேரவை இன்று கூடுகிறது: பரபரப்பான  அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டபேரவை இன்று கூடுகிறது.  ஆளும்  கூட்டணியில் 16 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா  கடிதத்தை  கொடுத்துள்ளதால்,  பேரவையில் ஆளும் கட்சியின் பலம் குறைந்துவிட்டது. எதிர்க்கட்சியின் பலம்  கூடிவிட்டது. இன்று தொடங்கும் பேரவை தொடரில்  எதிர்க்கட்சியான பாஜ   முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை  முன்வைத்து பாஜ அமளி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமாரசாமிக்கு மம்தா அறிவுரை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் மாலை தொலைபேசி மூலமாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை தொடர்புக் கொண்டு பேசினார். அப்போது, மாநிலத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்திய மம்தா, பாஜ.வின் முயற்சிகளுக்கு அடி பணியாதீர்கள் என குமாரசாமியை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் பேட்டி

அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நேரில் ஆஜராகி மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார் அளித்த பேட்டி: கர்நாடக சட்டப்பேரவை விதிமுறையில், ‘ராஜினாமா கடிதம் கொடுக்கும்  எம்எல்ஏ.க்களிடம் தன்னிலை விளக்கம் பெற்ற பின், அது திருப்தியாக  இருந்தால் அங்கீகரிக்க வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது, அதிருப்தியில் உள்ளவர்கள் ராஜினாமா  கடிதம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக் கொண்டு சில கேள்விகள் எழுப்பினேன்.  அவர்கள் பதில் கொடுத்துள்ளனர். அவர்கள் பதில் கொடுத்துள்ளார்கள் என்பதற்காக, உடனடியாக ராஜினாமாவை அங்கீகரிக்க முடியாது. விதிமுறைகள்படி, அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்  தனியாக அழைத்து விளக்கம் பெற வேண்டும். அதன்படி, ராஜினாமா கொடுத்துள்ள அனைவருக்கும் என்னை தனித்தனியாக சந்திக்க நேரம்  ஒதுக்கப்படும். அவர்களின் தன்னிலை விளக்கத்தை பெற்றபின் எனது முடிவை  தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: