நீரை சேமிப்பது மிகவும் அவசியம்... அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் தான் ‘அருமருந்து’

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறிய பொன்மொழி. தற்போது தமிழகத்தில் தாண்டவமாடும் வறட்சியின் கோரமும், காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு தொடரும் போராட்டங்களும், வள்ளுவரின் பொன்மொழியை நாம், கடைபிடிக்க மறந்ததால் நிகழும் அவலங்களே என்கின்றனர் நீர்வள ஆர்வலர்கள். இது ஒரு புறமிருக்க, தண்ணீர் மனித உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்த சுவாரஸ்யமான, அதே நேரத்தில் பயனுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளனர் மருத்துவர்கள். மனித உடலில் தலை முதல் கால் வரை உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் முக்கியமானதாக உள்ளது. மனித உடலில் மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவீதமும், தசைகளுக்கு 70 சதவீதமும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் நீர்சத்து குறையும் நேரத்தில் மூளையின் செயல்பாடு குறைய தொடங்கும். மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. இதை தவிர வேறு எதுவும் இல்லை என்பது தலைசிறந்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல். இதுகுறித்து சேலம் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் மருத்துவர் செந்தில் குமார் கூறியதாவது: மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாதது. ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது உலகின் பல நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் தண்ணீர் சேமிப்பு, அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தண்ணீர் தினம் கொண்டாப்படுகிறது.

Advertising
Advertising

குடிநீர் முதல் விவசாயம், தொழிற்சாலை, போக்குவரத்து, உணவு தயாரிப்பு என்று எண்ணற்ற பயன்பாடுகளுக்கும் தண்ணீர் தேவையானதாக உள்ளது. மனித உடலில் போதியளவு தண்ணீர் இல்லாமல் போனால் அடிக்கடி தாகமும், வாய் வறண்டும் போய்விடும். அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வராது. உடலில் போதுமான அளவு தண்ணீர் குறைந்தால் வியர்வை வற்றிவிடும், கெட்ட நீர் வெளியேறுவது தடைபடும். 70 சதவீத தண்ணீர் உடலில் குறைந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் ஏற்படும். இதயம் தண்ணீரால் ஆனது, போதுமான நீரானது ரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கிறது. நீர் தடைபாட்டால் ரத்தத்தின் அளவு குறைந்து, படபடப்பு ஏற்படும். இப்படி பல்வேறு நிலைகளில் தண்ணீர் ஒருவரின் உடலுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இது மட்டுமல்ல, மனித உடலில் போதியளவு தண்ணீர் இல்லாமல் போனால் மூட்டு பகுதிகளில் உராய்வு ஏற்படும். உணவுகள் செரிக்க தேவையான அமிலத்தன்மை குறையும். தண்ணீர் அளவு குறையும் போது சிறுநீரகத்தில் கல் உருவாகும்.மேலும் உடலில் தண்ணீர் குறையும்போது வெப்பம் அதிகரித்தும் மூளை செயல்பாடு குறைந்து ஸ்ட்ரோக் எனப்படும் நோயும் உருவாகும். போதிய தண்ணீர் எடுத்துக்கொள்ளாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். முகப்பருக்கள், எண்ணெய் மற்றும் கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தண்ணீர் தான், சிறந்த மருந்தாக உள்ளது.

பொதுவாக ஆறுகள், ஏரி, குளங்களில் கிடைக்கும் நீரானது மாசுத்தன்மை இல்லாதவை. இயற்கையாகவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக கிடைக்கிறது. தற்போது உள்ள நிலைமையில் அதில்தான் மாசுக்கள் அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகள், வீடுகளின் கழிவு நீர், இது போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் சேருகிறது. எனவே தற்போது கிடைக்கும் குடிநீரை, காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதோடு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல், மறுசுழற்சி செய்தல், கடல் நீரை குடிநீராக மாற்றுதல் போன்ற செயல்பாடுகளால் தலையாய பிரச்னையாக உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.இவ்வாறு மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Related Stories: