பயணிகள் ரயில்கள் இயக்குவதை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு: குறைந்த தூர ரயிலில் சோதனை முயற்சி

டெல்லி: பயணிகள் ரயில்கள் இயக்குவதை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மிகப்பெரிய அரசுத் துறைகளில் ஒன்று இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு 66 ஆயிரம் கிலோமீட்டர்  நீளம்கொண்ட இருப்புப்பாதைகள் உள்ளன. அவற்றில் 31 சதவிகிதம் இரட்டைப் பாதைகள். இந்த ஆண்டு வெளியான ரயில்வே நிதிநிலையில்கூட கடந்த ஆண்டைவிட அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டது. பயணிகள் ரயில்களை  தனியார் நிறுவனங்கள் இயக்குவது குறித்து, கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. ஆலோசனைக்குப் பிறகு, குறிப்பிட்ட சில வழித்தடங்களில், பயணிகள் விரைவு ரயில்கள் இயக்குவதை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க  மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

முதற்கட்டமாக 2 பயணிகள் விரைவு ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இயக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. குறைந்த தூர ரயில் வழித்தடங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனங்களிடம்  இருந்து, அடுத்த 100 நாட்களுக்குள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரயில் சேவையில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பி வைக்கலாம் என ரயில்வே ஆணையத் தலைவர்  வி.கே.யாதவ் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குவது போல் ரயில்வே பயணச்சீட்டுக்கும் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, ரயில் பயணச்சீட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு  வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, இதை குறைக்க  ரயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, மூத்த குடி மக்கள் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது முழு சலுகை வேண்டுமா? என்ற கேள்வி  கேட்கப்படும். இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. சமையல் வாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4,000 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: