ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வெளிப்படையாக நடைபெறும்: இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்... கடலூர் கலெக்டர் அறிவுரை

கடலூர்:  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை முதல் 17ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் எஸ்பி சரவணன் ஆகியோர் நேற்று கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறுகையில்,இந்த முகாமில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி யூனியன்  பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.

முகாமில் மருத்துவ பரிசோதனை, உடற்தகுதி, எழுத்துத்தேர்வு யாவும்  வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடன் நடைபெறும். எனவே இத்தேர்விற்காக இடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம். இம்முகாமில் கடலூர் மாவட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சார் ஆட்சியர் சரயூ, கர்ணல் தருண்துவா, மேஜர் பிரஜேஷ், சுபேதார், மேஜர் எஸ்.எம்.பட், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) தெய்வசிகாமணி, கடலூர் நகராட்சி ஆணையர் (பொ) டாக்டர் அரவிந்த் ஜோதி, டிஎஸ்பி சாந்தி உடன் இருந்தனர்.

விரல்ரேகைப் பதிவு

கடலூரில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் விளையாட்டு அரங்கினுள் நுழையும்போதே அவர்களது விரல் ரேகை பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும். அவர் தேர்ச்சி பெறாத பட்சத்தில் விளையாட்டு அரங்கை விட்டு வெளியே செல்லும்போதும் அவரது விரல்ரேகை பதிவு செய்யப்படும். கடலூரில் நடைபெறும் இந்த தேர்வில் தான் முதன்முறையாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

Related Stories: