இளையராஜா அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வருடங்களாக தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்னையில்  இசையமைப்பாளர் இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார். காப்புரிமை விவகாரத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதையே நான் செய்கிறேன்; இது காலம் தாழ்ந்த செயல் என்றும் அவர் விளக்கம் கூறியிருந்தார். இதற்கிடையே, இசை  நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டிய இளையராஜா, தனது பாடலை அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க  வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், அகி இசை, எக்கோ மியூசிக், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று அவரது பாடல்களை மேடைகளில் பாட தடை  விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: