மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி சோகத்தில் லாலு சாப்பிட மறுப்பு

ராஞ்சி:  பீகார் மற்றும் ஜார்கண்டில் மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து சோகத்தில் மூழ்கியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக ராஞ்சியில் இருக்கும் ரிம்ஸ்  மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. இதில் பீகாரில் 19 இடங்களில் லாலுவின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 40 தொகுதிகளில்  ஒரு இடத்தை மட்டுமே காங்கிரஸ் பிடித்தது. 39 இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் கூட ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெறவில்லை.

பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட்ட லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் ராம்கிர்பால் யாதவிடம் தோல்வியை சந்தித்தார். இதேபோல் கடந்த காலங்களில் லாலுவிடம் இருந்த சரண் தொகுதியில்  மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவின் மாமனார் சந்திரிக்கா ராய் போட்டியிட்டார். இந்த தொகுதியையும் பாஜ கைப்பற்றியது. கடந்த 2014ல் மோடி அலை வீசியபோது கூட ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தோல்வியை லாலுவால் தாங்க முடியாமல் துவண்டு போயுள்ளார். சோகத்தில் மூழ்கிய அவர், 2 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் வருத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று  முன்தினம் மருத்துவர்களின் வற்புறுத்தலின்பேரில்  உணவு உட்கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: