அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்

மதுரை: அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து, மதுரையில் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகரில் ஏற்படும் மின்தடை குறித்து பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனால், பொதுமக்களும் முன்னேற்பாடுடன் அன்றைய பணிகளை முடித்துக் கொள்கின்றனர். ஆனால், மாநகரில் சில பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மகாத்மா காந்தி நகர் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக மீனாம்பாள்புரம், எஸ்.ஆலங்குளம் மற்றும் ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு 9 மணிக்கு ஏற்படும் மின்தடை அதிகாலை வரை நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மாணவ-மாணவியர், இரவு நேர மின்தடையால் பெரும் அவதிப்படுகின்றனர்.

 

இந்நிலையில் எஸ்.ஆலங்குளம் பகுதியில் (மாநகராட்சி 4வது வார்டு) கடந்த சில நாட்களாக தொடரும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஆலங்குளம் முதல் பஸ்நிறுத்தத்தில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில், நற்துணை இயக்கம் அமைப்பின் வடக்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மதியபிடாரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூடல்புதூர் போலீசார் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: