தன்னலம் கருதாத தெய்வம்: அன்னையை மகிழ்விக்கும் அன்புப்பரிசு

தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். ஒரு கால கட்டம் முதல் தான் மண்ணில் புதையுறும் வரை தன்னலம் இல்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பவள் தாய். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. அம்மா என்பது உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அதற்கு எதுவுமே ஈடாகாது. எனவே அப்படிப்பட்ட அன்னையை போற்ற ஒருநாள் கொண்டாடப்படுகிறது. அதுதான் அன்னையர் தினம். நாடெங்கும் மே மாதம் 2ம் வாரம் ஞாயிறு அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் பல நாடுகளில் இந்த தினத்தை கொண்டாடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. நமது நாட்டின் தேசிய அன்னையர் தினம் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப் படுகிறது. உடல் தந்து, உதிரம் பெருக்கி, ஆணோ, பெண்ணோ உருவறியாமல், உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும். வயிற்றுக்குள் இருக்கும் போது தொப்புள் கொடி வழி உணவூட்டி, பிறந்தபின் பாலூட்டி, வளர்ந்த பின்னும் சீராட்டி, பிள்ளைக்காகவே வாழும் மனித தெய்வம், அன்னை இன்றி வேறு யார்? தனக்கென்று எதுவுமே வைத்துக் கொள்ளாத துறவியின் மனப்பக்குவம், மனிதப் பிறவிக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அனைத்திற்கும் அன்னையே பிரதானம்.

அன்னையின் அன்புக்கு அளவேது, விலையேது. வற்றாத ஜீவநதியாக அன்னையர் தரும் அந்த அளவில்லாத அன்புதான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார சக்தி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் கடவுளுக்கும் மேலான அன்னையை இன்றாவது நாம் அனைவரும் மகிழ்விப்போம். எப்படி தாயை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்கு கோடி கணக்கில் செலவு செய்து பரிசு பொருட்களோ, விலை உயர்ந்த ஆபரணங்களோ, அல்லது வேறு ஏதாவது பெரிதாக செய்யலாம் என்றெல்லாம் இல்லை. தாய் என்பவள் சுயநலம் இல்லாதவள். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் நமது பிள்ளைகள் ஒரு நாளாவது தம்முடன் செலவிடமாட்டார்களா என்பதே. தற்போது டெக்னாலஜி உலகமாக மாறிவிட்டது. எப்போதும் கையில் செல்போன், கணினி போன்ற இயந்திரங்களோடு நமது நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் அன்ைனயர் தினமான இன்றாவது தமது தாயுடன் ஒரு நாள் பொழுது முழுவதும் செலவிடலாமே. வழக்கமான வாழ்த்து அட்டைகள், சாக்லேட், கேக், மலர்கள் என்று வழக்கமான பரிசுகளை தவிர்த்து விட்டு தனித்துவமான உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் நீங்களே எழுதிக் கொடுங்கள்.

சிறிய பரிசாக இருந்தாலும் மிகச் சிறப்பான பரிசாக அதை உணர முடியும். உங்களின் வெற்றிக்கும், வேலைகளுக்கும் உங்கள் அம்மாவின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதை அழகான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களுக்காக உங்கள் அம்மா செய்த தியாகங்களை நினைவுப்படுத்தி பாராட்டுங்கள். உங்களின் வாழ்வுக்கு அம்மா எப்படியொரு பொக்கிஷமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் அழகாக எழுதி பல வருடத்தின் புகைப்படங்களை இணைத்து பரிசளியுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை உங்களது கையாலேயே சமைத்து கொடுங்கள். அவர்களை வெளியில் அழைத்து சென்று மகிழ்ச்சியில் திழைக்க வைக்கலாமே. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.

Related Stories: