குமரி தொகுதியில் 45,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

குமரி: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 45,000 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ் மீனவர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ராஜ்குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கன்னியாகுமரி மாவட்டம் தூசூர், சின்னத்துரை, ராஜமங்கலம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இருக்கக்கூடிய சுமார் 45,000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தன்று வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர். மேலும் ஒக்கி புயல் வந்த சமயத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முறையாக நிவாரண பணிகளை செய்யவில்லை.

இதனால் ஆளும் கட்சியினருக்கு மீனவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதன் காரணமாகவே இதுபோன்று பெயர்களை நீக்கியுள்ளனர். இது தனிமனித உரிமை பறிக்கப்படும் செயல் என புகார் தெரிவித்துள்ளார். எனவே, கன்னியாகுமரி தொகுதியில் மே 23ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் முன்பு நடத்தப்பட்ட மக்களவை தேர்தலை ரத்து செய்து குமரி தொகுதிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடப்படவேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 45,000 பெயர்களை மீண்டும் இடம்பெற செய்து மீண்டும் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கால அவகாசம் கோரியதன் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கிலும் கால அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல வாக்காளர் பெயர்களை சரிபார்ப்பது, திருத்துவது போன்ற பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் விடுபட்ட மீனவர்களின் பெயர்களை சேர்த்திருக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: