மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் - பாஜக கட்சியினர் இடையே மோதல் : பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த நபர் கைது

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 51 மக்களவை தொகுதிகளில் ஐந்தாவது கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப்  பிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மேற்கு வங்கம் 7, மத்தியப்பிரதேசம் 7, பீகார் 5, ஜார்கண்ட் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் பாரக்பூர் என்னும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் பாரதிய ஜனதா வேட்பாளர் அர்ஜுன் சிங் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதேபோல் பீகார் மாநிலம் சாப்ரா தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 5ம் கட்டத்தில் ஜம்மு - காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் லடாக் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று அதிகாலை புல்வாமாவின் டிரால் பகுதிக்கு தேர்தல் அலுவலர்களை ஏற்றிச் சென்ற 23 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் இளைஞர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதுடன் சில வாகனங்களை தீ வைத்து எரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனினும் தேர்தல் அலுவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், ஒரு வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: