தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு ஏப்.,2ம் தேதி தமிழகம் வருகை!

சென்னை : தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏப்.,2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வானங்களை சோதனை செய்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் இதுவரை பல கோடி ரூபாய் பணமும், தங்க, வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகமானவை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் வர உள்ளனர். ஏப்ரல் 3ம் தேதிவரை சென்னையில் தங்கியிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதுதவிர அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆயத்தங்களை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்து தேவைப்படும் அறிவுரைகளை வழங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையர் சென்று, தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கி விடுவார். மேலும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், காவல்துறையினர், செலவின பார்வையாளர்களிடமும் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் பணம் பட்டுவாடா அதிகளவில் நடப்பதாக கூறப்படும் நிலையில், அதனை தடுக்க தலைமை தேர்தல் ஆணையர்கள் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரி வருகையால், தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேலும் சுறுசுறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வர உள்ளதால் ஏப்.,2ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: