சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த விவகாரம்: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம்

டெல்லி: பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது. வோக்ஸ்வேகன் டீசல் கார்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2018 நவம்பர் 16ம் தேதி, வோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.100 கோடி ரூபாயை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அபராதமாக செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என வோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையில தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், பெரு நிறுவனங்களுக்கான அமைச்சகம், ஆட்டோமோடிவ் ஆய்வுக்கான இந்திய கூட்டமைப்பு மற்றும் தேசிய பசுமை பொறியியல் ஆய்வு அமைப்பு உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவானது, வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.171.31 கோடியை அபராதமாக விதிக்கலாம் என பரிந்துரை செய்தது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள், டெல்லியில் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடை காற்றில் கலக்கவிட்டதாகவும் அந்த குழு தகவல் தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாது, எமிஷன் விதிகளை மீறிய விவகாரத்தில் வோக்ஸ்வேகன் நிறுவன வாகனங்களின் இந்திய விற்பனைக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் ஆசிரியை அய்லாவதி உள்ளிட்ட பலர் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடியை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, ரூ.500 கோடியை 2 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடடு வாரியத்திடம் டெபாசிட் செய்யவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: