டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி,மே24: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: ஜூன் 1ம் தேதி இடைக்கால ஜாமீன் முடிவடைந்த பின்னர் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். டெல்லி முதல்வராக பதவியேற்று 49 நாட்களுக்குள் (2013ல்) பதவி விலகும் போது யாரும் ராஜினாமா கேட்கவில்லை. எனது போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் இந்த முறை நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மக்களவை தேர்தலிலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க முடியாது என்று கருதியதால் பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டி என்னை கைது செய்தார். இந்த முழு வழக்கு முற்றிலும் பொய் வழக்கு. இப்போது நான் ராஜினாமா செய்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஒருநாள் கைது செய்து ராஜினாமா செய்யச் சொல்வார்கள். இதே போல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் அரசுகள் கவிழ்க்கப்படும், இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

முதலில் ரூ.100 கோடி இப்போது ரூ.1100 கோடி; கெஜ்ரிவால் கூறுகையில்,’ டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி ஆகியோரை மதுபான வழக்கில் கைது செய்து நாடகம் நடத்தினார்கள். முதலில் 100 கோடி கலால் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக 1,100 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் பணம் எல்லாம் எங்கே போனது?. ஒரு பைசா கூட மீட்கப்பட்டதா? நகைகள் மீட்கப்பட்டதா? எங்களைக் கைது செய்ய எந்த ஆதாரமும் இல்லை’ என்றார்.

மீண்டும் சிறைக்கு செல்ல பயம் இல்லை: கெஜ்ரிவால் கூறுகையில்,’ ஜூன் 1ம் தேதிக்கு பிறகு மீண்டும் திகார் சிறைக்கு செல்வது குறித்து எனக்கு எந்த பதற்றமோ, பயமோ இல்லை. தேவைப்பட்டால் நான் திரும்பிச் செல்வேன். நாட்டைக் காப்பாற்றும் எனது போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை நான் கருதுகிறேன்’ என்றார்.

The post டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: