சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்... கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு 45 நாட்களுக்கு பிறகு எச்ஐவி ரத்தப்பரிசோதனை

மதுரை: சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அவரது குழந்தைக்கு ரத்தப்பரிசோதனை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த கர்ப்பிணிக்கு, சாத்தூர் அரசு மருத்துவமனையில், எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த ரத்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரத்தைச் சேர்ந்த வாலிபர் மணி (19 பெயர் மாற்றப்பட்டுள்ளது) தானம் செய்துள்ளார். தானமாக கொடுத்தபிறகு தான், தனது ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருப்பதே இவருக்கு தெரியவந்தது.

உடனே சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அப்போதுதான், அவரிடமிருந்து பெறப்பட்ட ரத்தம், சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட விவரம் தெரிந்தது. பின்னர் அவர் எச்ஐவி சிகிச்சைக்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று பரவ காரணமாக இருந்து விட்டோமே என்ற சோகம் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். 113 ஏ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 31ம் தேதி காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துமவனை மகப்பேறு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவருக்கு கடந்த ஜன.17ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. டீன் (பொறுப்பு) சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘குழந்தையின் எடை 1.75 கிலோ உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். குழந்தைக்கு எச்ஐவி தொற்று உள்ளதா என்பதை 45 நாட்களுக்கே பிறகே சோதனை மூலம் முழுமையாக கண்டறிய முடியும்.

எச்ஐவி தடுப்பு மருந்துகள் குழந்தைக்கு தொடர்ந்து வழங்கப்படும்’’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து 45 நாளுக்கு பிறகு இன்று எச்ஐவி பரிசோதனை நடைபெறுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு எச்ஐவி உள்ளதா என ரத்தப்பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக குழந்தையின் ரத்தம் மதுரை,  சென்னை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: