சிவகாசி பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு குழு வருகை: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய நாளை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் குழு ஆய்வு செய்கிறது. இதை நேற்று உச்ச நீதிமன்றத்தில் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உற்பத்தி விஷயத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி சில நிபந்தனைகளை விதித்தது. அதில் குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அப்துல்நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு தமிழகத்தில் 974 ஆலைகள் இழுத்து மூடப்பட்டு சுமார் 4லட்சத்திற்கும் மேலான பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் வலியுறுத்தினார். இதேப்போல் அனைத்து மாநிலத்தின் தரப்பிலும் அவர்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதில்,”பட்டாசு விவகாரத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் பசுமை பட்டாசு தொடர்பான வரையறை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு குழுவினர் சிவகாசி செல்கின்றனர் என தெரிவித்தனர்.‘பசுமை பட்டாசு தயாரிக்க ஆலைகள் ஒப்புதல் தெரிவித்தன. ஆனால் தற்போது பல ஆலை மூடப்பட்டுள்ளது; எத்தனையோ புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. பசுமை பட்டாசை எளிமையாக தயாரிப்பது என்பது எப்படி என வழி காணாமல் கால தாமதம் செய்வது ஏன்?’ என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வரும் 26ம் தேதிக்குள் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: