வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில், பஸ்சில் கடத்தி வந்த 7 லட்சம் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: வெளி மாநிலத்தில் இருந்து ரயில், பஸ்சில் கடத்திய ₹7 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.புவனேஸ்வரில் இருந்து விசாகப்பட்டினம், எழும்பூர், திருச்சி வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, எஸ் 4 பெட்டியில் சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் ₹4 லட்சம் மதிப்பிலான 18 கிலோ இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம், கோத்தப்பள்ளியை சேர்ந்த மண்டேலா முரளிகிருஷ்ணா (44) மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த மகேஷ்பிரபா (39) என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். மற்ெறாரு சம்பவம்: ஆந்திராவில் இருந்து திருத்தணி, திருவள்ளூர் வழியாக சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ஜுலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார், திருவள்ளூர் ஜெ.என்.சாலை பஸ் நிறுத்தத்தில், திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்களில் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, ஒரு பஸ்சில் இரண்டு பைகளில் 14 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ₹3 லட்சம். தொடர்ந்து, கஞ்சா கடத்திவந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மராவ் (50) என்பதும், சென்னைக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நரசிம்மராவை கைது செய்த காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

₹8 லட்சம் குட்கா பறிமுதல்

புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் கதிர்வேடு மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், ₹8 லட்சம் மதிப்புள்ள 40 குட்கா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த திருவொற்றியூரை சேர்ந்த பாலாஜி (33), வியாசர்பாடியை சேர்ந்த இளவரசன் (34) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது குட்கா பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டு மஞ்சம்பாக்கத்திலுள்ள குடோன்களில் பதுக்கி வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் வழகுப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் எங்கெல்லாம் குட்கா முட்டைகளை விற்பனை செய்துள்ளனர்? இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? என விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: