2வது திருமணத்திற்கு இடையூறு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தந்தை கைது

கிருஷ்ணகிரி: 2வது திருமணத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதி 4 வயது குழந்தையை தூக்கி வீசிய கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் சக்திவேல் (27). இவரது மனைவி சுதா (22). இவர்களுக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர் பூவரசன் என்பவருக்கும், சுதாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.

இதையறிந்த சக்திவேல், மனைவியை கண்டித்ததால் அவர் கணவரை பிரிந்து சென்று, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, தனது 2 குழந்தைகளையும், போச்சம்பள்ளியில் வசிக்கும் பெற்றோர் பராமரிப்பில் விட்டு விட்டு, போச்சம்பள்ளி அடுத்த மடத்தானூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது செங்கல் சூளையில் சக்திவேல் வேலை செய்து வருகிறார். மேலும், 2வது திருமணம் செய்வதற்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய பெண் வீட்டார், அந்த குழந்தைகளை தாயிடம் விட்டு விட்டு வந்தால், பெண் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்காக, நேற்று முன்தினம் போச்சம்பள்ளிக்கு சக்திவேல் வந்துள்ளார். இதனையறிந்த பூவரசன், அங்கு வந்து சக்திவேலிடம் தான் கொடுத்த ₹10 ஆயிரத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது, உன்னால்தான் என்னுடைய மனைவி பிரிந்து போனாள், எனது வாழ்க்கையே நாசமாகப் போனது. என்னிடம் பணத்தை கேட்கிறாயா? என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக்திவேல், பூவரசனை தாக்கத் தொடங்கினார். அப்போது, வீட்டில் இருந்த அவரது 4 வயது மகன், தந்தையின் காலை கட்டிக் கொண்டான். இதை பார்த்த சக்திவேலுக்கு, ஆத்திரம் தலைக்கேறியது. உன்னாலும், உன் தாயாலும்தான் இந்த பிரச்னையே வந்தது.

நீ யாருக்கு பிறந்தாயோ? செத்து தொலை என்று கூறியபடி, குழந்தை என்றும் பாராமல் தூக்கி வீசியுள்ளார். இதில் அங்குள்ள அம்மிக்கல்லின் மீது விழுந்து காயமடைந்த குழந்தை மயங்கி விழுந்தான்.இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சக்திவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post 2வது திருமணத்திற்கு இடையூறு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தந்தை கைது appeared first on Dinakaran.

Related Stories: