உல்லாச வீடியோ வௌியிடுவதாக கூறி அதிமுக பிரமுகரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது

அரியலூர்: பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக கூறி அரியலூர் அதிமுக பிரமுகரிடம் ரூ.1கோடி கேட்டு மிரட்டிய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாய்ராஜா (40). அதிமுக முன்னாள் நகர இணை செயலாளரான இவர், ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் பழுதடைந்ததால் சரி செய்வதற்காக சில தினங்களுக்கு முன் அரியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுத்து சரி செய்து வாங்கியுள்ளார்.

இதில் செல்போனை பழுது பார்க்கும் போது, அதில் தாய்ராஜா ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவு இருந்ததை கடை உரிமையாளர் பார்த்துள்ளார். பின்னர் அவர், தனது நண்பர்களான சிவபாரதி (26), ராஜாஜிநகரை சேர்ந்த சரவணகுமார்(23), காமராஜ்நகரை சேர்ந்த வெங்கடேஷ் (32) ஆகிய மூன்று பேரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் இந்த வீடியோ பதிவை பார்த்துவிட்டு தாய்ராஜாவை தொடர்பு கொண்டு, உங்களது ஆபாச படங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது.

அதனை தர வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். தரவில்லை என்றால், அதனை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்ராஜா, சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தாய்ராஜாவை மிரட்டி பணம் கேட்ட 3 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post உல்லாச வீடியோ வௌியிடுவதாக கூறி அதிமுக பிரமுகரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: