ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்

முஷ்ணம்: 5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (38). இவரது மனைவி ரேணுகா (33). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது தங்கை திருமண செலவுக்காக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி தவணை தொகையை சிதம்பரம் செலுத்தி வந்தார்.

இன்னும் ஒரு சில தவணைகள் பாக்கி உள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் ஆகியோர் சிதம்பரத்தின் வீட்டுக்கு வந்து சிதம்பரம் எங்கே என்று அவரது மனைவி ரேணுகாவிடம் கேட்டுள்ளனர். அவர் வெளியே சென்றிருப்பதாக கூறினார். இதையடுத்து மேலாளர் மற்றும் ஊழியர்கள் கடன் பாக்கிக்காக வீட்டை பூட்டுகிறோம் என்று கூறி, வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருந்த போது கிரைண்டரை நிறுத்தக் கூட அனுமதிக்காமல் ரேணுகாவை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு பைக்கிற்கு போடும் ரோப் பூட்டு மூலம் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இது குறித்து சிதம்பரம் முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், சிதம்பரத்தில் உள்ள நிதி நிறுவனத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் இன்னும் ரூ.50 ஆயிரம் மட்டுமே தவணை தொகை செலுத்த வேண்டி உள்ளது. கொரோனா காலத்தில் வேலையின்மை காரணமாக இத்தொகையை செலுத்த முடியவில்லை. இதற்குள் நிதி நிறுவன மேலாளர் என் வீட்டுக்கு வந்து வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இது குறித்து போலீசார் நிதி நிறுவன பிரதிநிதிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் சிதம்பரம் வீட்டுக்கு சென்று நிதி நிறுவன மேலாளரால் போடப்பட்ட பூட்டை உடைத்து சுமார் ஒரு மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரை நிறுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம் appeared first on Dinakaran.

Related Stories: