சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் நள்ளிரவு நடத்திய வாகன தணிக்கையில் சென்னை சென்ற சொகுசு பேருந்து, சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வந்த காரில் ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பகுதி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். நள்ளிரவு அவ்வழியாக தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாளகுடாவில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் சொகுசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நல்கொண்டாவை சேர்ந்த திப்பனாசுமதி, எர்ரட்லா தேஜாஸ்ரீ, ஷேக் பர்வீன், துரி யாதம்மா, பாண்டு சிவம்மா ஆகியோர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.1 கோடியே 61 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது வீட்டு விசேஷத்திற்காக சென்னையில் தங்க நகைகள் வாங்குவதற்காக பணத்துடன் செல்வதாக தெரிவித்தனர்.

அவற்றுக்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், திப்பனாசுமதி உட்பட 5 பேரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.இதேபோல் அதே வழியாக சென்னையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த பித்ரா மோகன்குமார், விஜயவாடாவை சேர்ந்த பகில்லா பிரபாகர் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களது காரை சோதனை செய்தபோது அதில் சென்னையில் இருந்து கொண்டுவந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 1497.410 கிராம் தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து பித்ரா மோகன்குமார் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க கட்டிகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: