‘இறைவா 2019ல் குற்றங்கள் நடக்க கூடாது’ வெள்ளியனை காவல் நிலையத்தில் போலீசார் கிடா வெட்டி விருந்து உயரதிகாரிகளுக்கு பார்சல் அனுப்பி வைப்பு

கரூர்: ‘‘இறைவா 2019ல் குற்றச்சம்பவங்கள் நடக்காத ஆண்டாக இருக்க வேண்டும்’’ என்று வேண்டி கரூர் வெள்ளியணை காவல் நிலையத்தில் நேற்று மதியம் கிடா வெட்டி காவலர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. கரூர்-திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்டத்தின் எல்லையில் வெள்ளியணை காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையத்தில், நேற்று காலை அனைத்து காவலர்களும் பரபரப்புடன் காணப்பட்டனர். மதியம் காவல் நிலையம் அருகே கிடா வெட்டி, மட்டன் குழம்பு, வறுவல் போன்ற அனைத்து விதமான சமையல்களும் நடந்தன. காவல் நிலையம் அருகிலேயே சமைக்கப்பட்ட அனைத்து வகையான உணவுகளும் சாமிகளுக்கு படையலாக வைக்கப்பட்டு, ‘‘இறைவா அடுத்து பிறக்கவுள்ள 2019ம் ஆண்டாவது குற்றச்சம்பவங்கள் எதுவும் நடக்காத ஆண்டாக இருக்க வேண்டும்’’ என பயபக்தியுடன் போலீசார் வேண்டி கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அருகிலேயே அனைத்து காவலர்களும் மட்டன் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு மற்ற பணிகளை பார்க்க புறப்பட்டு சென்று விட்டனர். மேலும், காவல் நிலையம் சார்பில் கிடா வெட்டி சமைத்து பூஜிக்கப்பட்ட இந்த விருந்து சாப்பாட்ைட, கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய உயரதிகாரிகளுக்கும் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு வெள்ளியணை செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெள்ளியணை காவல் நிலைய அதிகாரிகள், கிடா விருந்து வைத்து சாமி கும்பிட்டு அனைத்து உயரதிகாரிகளையும் வரவழைத்து விருந்து படைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: