ஜலதோஷத்துக்கு சரியான சிகிச்சை

‘மருந்து எடுத்துக் கொண்டால் 7 நாட்களில் குணமாகும். இல்லாவிட்டால் 1 வாரத்தில் சரியாகும்...’ ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு நகைச்சுவையாகச் சொல்லப்படுகிற ஆலோசனை இது. நிஜம் என்ன?!

ஜலதோஷம் பிடிப்பது ஒருவகையில் நல்லதுதான். உடலில் தேவையில்லாமல் சேரும் அந்நியப் பொருட்களையும், வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளையும் வெளியேற்றுவதற்கு ஜலதோஷம் பயன்படுகிறது. பெரியவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். சிலர் லேசாக சளி பிடித்தவுடனே மருந்துக்கடைக்குப் போய், அவர்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுவார்கள்.

இது தவறான நடைமுறை. இதனால் அவர்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். 3 நாட்களுக்கு மேலாக ஒருவருக்கு தும்மல் இருந்தால், சளியின் நிறம் மாறினால், சளியில் துர்நாற்றம் வீசினால் அவசியம் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூழல் மாசுகேடாக இருந்தால் கூட, அலர்ஜி காரணமாக தும்மல், இருமல் போன்றவை வரலாம். ஏசியில் அதிகமாக இருப்பவர்களுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். ஜலதோஷம் வந்தால் ஓய்வு எடுப்பது அவசியம். இந்தப் பிரச்னையுடன் சிலர் வேலைக்குப் போவார்கள். தும்மும் போதும் இருமும்போதும் மற்றவர்களுக்கும் பரவி விடும். குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் கூட்டிப்போவது நல்லது. ஜலதோஷத்துடன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு வேகமாக பரவும்.

இது போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் கைகளை ஆன்டிசெப்டிக் திரவம் கொண்டு சுத்தமாக கழுவச் சொல்வதும் அவசியம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிப்பது மரபு வழியாக வரும். இவர்கள் தேவைக்கு ஏற்ப மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தூசிகள் இல்லாமல் வீட்டைச் சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

இயற்கையான எதிர்ப்புச்சக்தியை உடலில் உருவாக்கிக் கொண்டால் எந்த நோயும் வராமல் காக்கலாம். அதற்கு சமச்சீர் உணவு அவசியம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதற்குப் பதிலாக கொய்யா, நெல்லிக்காய் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் சியை பெறலாம். சுக்கு, சீரகம், துளசி கலந்த நீரை சுட வைத்துக் குடித்தால் இயல்பாகவே எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். தூதுவளையை உணவில் சேர்த்துக்கொண்டால் சளி பிடிப்பது குறையும்.

- ஜெனிஸ்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: