தூர்வாரப்படாத எண்ணூர் முகத்துவாரம் மீனவ கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம்

* பொதுப்பணித்துறை அலட்சியம்

* அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி பராமரிக்காததால், மணல் மேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாமல், மீனவ கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக எண்ணூர் நெட்டுக்குப்பத்தை  ஒட்டியுள்ள முகத்துவார பகுதி அருகில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட நீர், மீண்டும் முகத்துவார ஆற்றில் விடப்படும். இவ்வாறு அனல்மின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றும் போது, முகத்துவார பகுதியில் மணல் மேடுகள் ஏற்பட்டு, தூர்ந்துவிடும். இதனால், பக்கிங்காம் கால்வாய் நீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், மீனவர்கள் முகத்துவாரம் வழியாக கடலுக்கு படகுகளை எடுத்துச் செல்லவும் சிரமமாக இருக்கும்.

எனவே, எண்ணூர் அனல் மின் நிலைய அதிகாரிகள் டிரஜ்ஜர் என்ற இயந்திரங்கள் மூலம் அவ்வப்போது முகத்துவாரத்தை ஆழப்படுத்தி மணலை அப்புறப்படுத்துவார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரஜ்ஜர் இயந்திரம் பழுதாகி கிடப்பதால், முகத்துவார ஆற்றில் மணலை அப்புறப்படுத்தாமல் தூர்ந்து  கிடக்கிறது. இதனால், ஆற்று நீர் கடலுக்கு சீராக செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக் காலங்களில் புழல் ஏரியில் இருந்து வரக்கூடிய உபரிநீர் இந்த முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்றுவிடும். தற்போது முகத்துவாரம் தூர்ந்துள்ளதால், மழை வெள்ளம் ஏற்பட்டால், கடலுக்கு செல்ல முடியாமல் அருகிலுள்ள மீனவர் கிராமங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் வெளியேறும் சாம்பல் மணலில் கலந்து மேடாகிவிட்டது. இதனால், முகத்துவார ஆற்றில் இருந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கிவிடுகிறது. கடல்நீரும், சீற்றம் ஏற்படும்போது முகத்துவாரம் வழியாக ஆற்றில் கலக்காமல், மீனவ கிராமங்களுக்குள் புகுந்துவிடுகிறது.

இந்த மணல் மேட்டை அகற்ற பொதுப்பணித் துறையினரிடம் டிரஜ்ஜர் என்ற இயந்திரம் இருந்தது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 30 அடி வரை சீரமைக்கலாம். இந்த இயந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. ஆனால், இதுவரை சீரமைக்கவில்லை. அதற்கு பதில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் மேட்டை அகற்றுகின்றனர். இதனால் ஒரு நாள் முழுதும் சீரமைத்தாலும் 50அடிக்கு மேல் சீரமைக்க முடியவில்லை. இதனால், முகத்துவாரம் தூர்வரப்படாமல் தூர்ந்துள்ளது.

பெருமழை வந்தால், புழல் ஏரி உபரிநீர், ஆற்று நீர் ஆகியவை கடலுக்குள் செல்ல முடியாமல், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகும் அபாயம் உள்ளது. எனவே, பொதுப்பணி துறை அதிகாரிகள், பழுதாகியுள்ள டிரஜ்ஜர் இயந்திரத்தை சீரமைத்து, முகத்துவார ஆற்றை ஆழப்படுத்தி, தண்ணீர் செல்லும் பாதையை அகலப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

எண்ணூர்  நெட்டுக்குப்பம் கடற்கரையையொட்டி உள்ள முகத்துவார ஆற்றில் நூற்றுக்கணக்கான  மீனவர்கள் இறால், நண்டு, மீன் பிடித்து தொழில் செய்து  வருகின்றனர். தற்போது, அனல்மின் நிலையத்தில் இருந்து  முகத்துவார ஆற்றுக்கு வரக்கூடிய சுடுநீர் மற்றும் சுற்றுவட்டாரத்தில்  உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் ரசாயன கழிவுகளால் ஆற்றில் நீர்வாழ் உயிரினங்கள் செத்து விடுகின்றன. இதனால் இதை நம்பி  வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

படகுகள் சேதம்

எண்ணூர் முகத்துவார  ஆறு வழியாக மீனவர்கள் பைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க  செல்வார்கள். தற்போது ஆறும், கடலும் சேரக்கூடிய இடத்தில் மணல் குவிந்து  கிடப்பதால் படகுகள் செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் சிரமம்  ஏற்படுவதோடு, படகுகளில் மீன்பிடித்து விட்டு வரும் மீனவர்களின் பைபர்  படகுகள் இந்த மணலில் சிக்கி சேதமடைகிறது. எண்ணூர் முகத்துவார பகுதி தூர்ந்து கிடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: