கர்நாடகாவில் கோயிலில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

சாம்ராஜ்நாகர்: கர்நாடக மாநிலத்தில் ஹன்னுர் பகுதியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். கிச்சுகுத்து மாரம்மா அம்மன் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்தனர். சாம்ராஜ்நகரில் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பக்தர்கள் சாப்பிட்டனர்.

சற்று நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடியதால் ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் குழந்தை உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதம் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சுயநினைவிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள 70 பேரில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சம்பவ இடத்துக்கு  விரைந்த போலீசார் பிரசாத மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் பழிவாங்க கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: