நாகேஸ்வர ராவிடம் இடைக்கால பொறுப்பு: அலோக் வர்மா, அஸ்தானா பதவியில் நீடிக்கின்றனர்: சிபிஐ விளக்கம்

புதுடெல்லி: ‘சிபிஐ.யில் அலோக் வர்மா இயக்குனராகவும், ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குனராகவும் தொடர்ந்து நீடிக்கின்றனர். நாகேஸ்வர ராவிடம் இடைக்கால பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’ என சிபிஐ விளக்கம்  அளித்துள்ளது.  வழக்கில் இருந்து குற்றவாளியை தப்ப வைக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின ர். இதில், அஸ்தானா மீது எப்ஐஆர்  பதிவு செய்ய அலோக் வர்மா உத்தரவிட்டார். உயர் பதவியில் இருக்கும் இருவர் இடையே மோதல் ஏற்பட்டதால், இவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இவர்களின் பொறுப்புகளை இணை இயக்குனராக  பணியாற்றிய நாகேஸ்வர ராவிடம் வழங்கியது. மத்திய அரசின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

    

இந்த பிரச்னை பற்றி டெல்லியில் சிபிஐ செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த விளக்கம்: மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தின் உத்தரவுப்படி அலோக் வர்மா, அஸ்தானாவின் பொறுப்புகள், இடைக்கால ஏற்பாடாக இணை  இயக்குனர் நாகேஸ்வர ராவிடம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ.யில் அலோக் வர்மா இயக்குனராகவும், ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குனராகவும் தொடர்ந்து இருக்கின்றனர். இவர்கள் மீதான புகார்களை மத்திய விஜிலென்ஸ்  ஆணையம் விசாரித்து முடிக்கும் வரை, இவர்களின் பணிகளை இணை இயக்குனர் நாகேஸ்வர ராவ் கவனிப்பார். சிபிஐ அமைப்பில் 7 கோப்புகள் மாயமானதாக வரும் தகவல்கள் பொய். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: