ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரிக்க சிஏஜி.யிடம் காங்கிரஸ் கோரிக்கை: நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தும்படி மத்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பிடம்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர். பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக  காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. நாட்டின் பாதுகாப்பை மத்திய  பாஜ அரசு சமரசம் செய்துள்ளதாக கூறி, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் உள்ள உண்மைகள்  வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் 9 சதவீதம் குறைந்த விலைக்கே ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ேநற்று முன்தினம் தெரிவித்தார். இது உண்மையென்றால், 36  விமானங்கள் மட்டும் வாங்கப்படுவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கேள்வி எழுப்பினார்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும், இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கவுள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தத்தை தனது தேர்தல் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு  காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) விசாரணை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது  தொடர்பாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பினரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று மனு அளித்தனர். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா அளித்த பேட்டியில், “ரபேல் விமானங்கள் வாங்க செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தும், அதில் நடந்துள்ள முறைகேடுகள், தவறுகள், அரசுக்கு கிடைத்துள்ள கமிஷன் போன்ற  விவரங்களை தொகுத்து சிஏஜியிடம் மனு ்கொடுத்துள்ளோம். இது குறித்த அறிக்கையை தயாரித்து  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

 காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘ரபேல் ஒப்பந்தம் குறித்த உண்மைகள், ஆதாரங்களை சிஏஜி.யிடம் அளித்துள்ளோம். இந்த விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு வழங்காமல், எ்வ்வாறு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளோம். சிஏஜி விரைவில் தனது அறிக்கையை அளிக்கும் என்று நம்புகிறோம்.  இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்து வருவதாக சிஏஜி தெரிவித்துள்ளது. சிஏஜி.யின் இந்த அறிக்கை வெளியாகும்போது, ரபேல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும், உண்மையும்  வெளியாகும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: