பூங்கா, பசுமை பகுதிகளில் 4.15 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இறுதி வடிவத்தில் செயல் திட்டம்

புதுடெல்லி: பூங்காக்கள், பசுமைப் பிரதேசங்கள், சாலையோரம் என தலைநகரின் முக்கியப் பகுதிகளில் 4.15 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவெடுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), அதற்கான செயல் திட்டத்தின் இறுதி வடிவத்தை எட்டியது. இது குறித்து டிடிஏ அதிகாரி கூறியிருப்பதாவது: மரம் வளர்ப்பதால் காற்று மாசு பெருமளவு குறையும் என கவர்னர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும், தலைநகரின் பூங்காக்கள், சாலை ஓரங்கள், யமுனை ஆற்றுப்படுகை, சாலைகளின் நடுவில் அமைந்துள்ள டிவைடர் மற்றும் பசுமைப் பகுதிகளில் மரம் வளர்த்து காடு பரப்பு அதிகரிக்க வேண்டும் என கவர்னர் அனில் பைஜால் அறிவுறுத்தி இருந்தார்.

அதையடுத்து டிடிஏ அதிகாரிகள் சார்பில் வனம் வளர்க்கு திட்டம் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செயல் திட்டம் தீட்டப்பட்டு, அதன் பேரில் கருத்து கேட்டறியப்பட்டது. பின்னர் செயல்திட்டத்தின் இறுதிவடிவம் தயாரானது. அதன்படி, டெல்லியில் 4.15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். அதற்காக பல ரக மரக்கன்றுகளை கொள்முதல் செய்ய உள்ளோம். நடப்பு விதைப் பருவத்தில், மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகள் நட்ட பின்னர் அவற்றின் பராமரிப்பு பணிகளில் கவர்னர் தீவிர கவனம் செலுத்த உள்ளார். சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், டெல்லி-மும்பை நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட தேசிய சாலை உள்கட்டமைப்பு நிறுவனங்களால் யமுனை ஆற்றுப்படுகையில் வெட்டப்படும் மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை டிடிஏ வரவேற்கிறது.இவ்வாறு அதிகாரி கூறியுள்ளார்.

Related Stories: