‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டில் முன்னணி இடத்தை பிடித்திருந்தவர், ரம்பா (51). போஜ்புரி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ‘த்ரீ ரோஸஸ்’, ‘விடியும் வரை காத்திரு’ ஆகிய தமிழ் படங்களை தயாரித்தார். கடந்த 2010 ஏப்ரல் 8ம் தேதி கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை காதல் திருமணம் செய்த அவருக்கு லான்யா, சாஷா ஆகிய மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர்.
கனடாவில் குடும்ப வாழ்க்கையில் தீவிர கவனம் செலுத்திய ரம்பா, நடிப்பில் இருந்து விலகி இருந்தார் என்றாலும், டி.வி ஷோக்களில் அதிகமாக பங்கேற்றார். கடைசியாக 2010ல் ‘பெண் சிங்கம்’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதற்காக அவர் கதை கேட்டு வருகிறார். மேலும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார். 16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரம்பா நடிக்க வருவது, அவரது ரசிகர்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
