நுரையீரல் திசுக்கள் பாதிப்பால் 37 வயது நடிகை திடீர் மரணம்

சென்னை: கன்னட நடிகை ரஷ்மி லீலா (37), பிராணா, கிராம தேவதே, சிஹி முத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கன்னட டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானார். அவர் டிவி தொடர்களில் நடித்த பிறகு அவரை தங்களது வீட்டில் ஒருவராகவே ரசிகர்கள் நேசிக்கத் தொடங்கினர். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருந்தார். தொடர்ந்து பல கன்னட தொடர்களில் நடித்து வந்தார். படங்களிலும் தொடர்ந்து நடித்தார். கடந்த 2019ம் ஆண்டு நுரையீரல் ஃபைப்ரோசிஸ் (நுரையீரல் திசுக்கள் வடுவாக மாறுதல்) நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து அவர் இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடக்கும்போது அதிகமாக மூச்சு திணறல் இருக்கும். நோய் முற்றும்போது மூச்சு திணறல் அதிகரித்துவிடும். உடல் எடை குறையும்.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவர் உடல் மெலிய ஆரம்பித்தார். தீவிர சிகிச்சை எடுத்தும் பயனில்லை. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் சரிக்கு மஞ்சு, கன்னட டிவி தொடர் எழுத்தாளர். இதற்கிடையே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் ரஷ்மி லீலாவுக்கு நடந்தது. அதன் பிறகு அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். இது குறித்து அவரது குடும்பத்தார் கூறும்போது, ‘‘அறுவை சிகிச்சைக்கு பிறகு ரஷ்மி லீலா குணமடைவார் என எதிர்பார்த்தோம். ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இளம் வயதில் அவள் எங்களை பிரிந்துவிட்டார்’’ என்றனர்.

Related Stories: