தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் அனுபமா ஆனந்த்ராஜை ஒருதலையாக காதலிக்கிறார், விஜே பப்பு நாசர் ஷா. ஆனால், அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு நபரை காதலிக்கிறார், அனுபமா ஆனந்த்ராஜ். இதனால் விரக்தி அடைந்த விஜே பப்பு நாசர் ஷா, திருமணத்துக்கு பெண் பார்க்கிறார். அப்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன? அனுபமா ஆனந்த்ராஜ் காதல் என்ன ஆனது என்பது மீதி கதை. முழுநீள காதல் கதைக்கு நன்கு பொருந்தியுள்ள விஜே பப்பு நாசர் ஷா, காதல் வலியை நன்கு கடத்தி இருக்கிறார். சில காட்சிகளில் பொம்மையை காதலியாக நினைத்து அவர் வாழ்வது உருக வைக்கிறது. அனுபமா ஆனந்த்ராஜ் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார். மற்றும் கேபிஒய் ராஜவேலு கட்டபொம்மன், சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா சந்தோஷ், டொமினிக் உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டரில் அசத்தியுள்ளனர். காட்சிகளின் விறுவிறுப்புக்கு பாலாஜி கே.சேகர் ஒளிப்பதிவு நன்கு உதவி இருக்கிறது. எம்.பாசில் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காதலை சொன்ன இயக்குனர் ஏ.அரவிந்த்ராஜ், இன்னும் வலிமையாக சொல்லி இருக்க வேண்டும். எனினும், புதுமுகங்களை வைத்து நல்லதொரு காதல் கதையை வழங்கி இருக்கிறார்.
