இந்தி படவுலகின் புதுமுக நடிகைகள் சிலர், தெலுங்கு படவுலகில் கால் பதித்துள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதன்படி, ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜூன், சமீபத்தில் ‘துரந்தர்’ என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்தார். இந்நிலையில், ‘யூஃபோரியா’ என்ற படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து அவர் தெலுங்கு படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். அதுபோல், ரவீணா டாண்டன் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் அறிமுகமானவர், ரஷா ததானி. கடந்த ஆண்டு வெளியான ‘ஆசாத்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘உய் அம்மா’ என்ற பாடலில் அவரது நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அவர் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் ‘னிவாச மங்காபுரம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்து, ‘லாபட்டா லேடீஸ்’ என்ற படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிதான்ஷி கோயல், ஆனந்த் தேவரகொண்டா ஜோடியாக ‘தக்சகுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது.
