காந்தாரா பட விவகாரம்: ரன்வீர் சிங் மீது திடீர் வழக்கு

பெங்களூரு: கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலைவடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் கூட, தொடர்ந்து ரன்வீர் சிங் கிண்டல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தெய்வத்தை அவமதிக்கும் வகையில் ரன்வீர் சிங் நடந்துகொண்டது, அப்பகுதியில் வசித்து வரும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரும், சவுண்டி தெய்வ பக்தருமான பிரசாந்த் மேதல் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ‘ரன்வீர் சிங்கின் செயல் திட்டமிட்டது மற்றும் வன்மமானது. நீதி மற்றும் பாதுகாப்பின் வடிவமாக திகழும் காவல் தெய்வத்தை பேய் என்று சொன்னது, இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரித்த 1வது கூடுதல் தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்ய ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: