நடிகை மிமிக்கு அவமதிப்பு: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசில் புகார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலை நிகழ்ச்சியின் போது மேடையில் அவமரியாதை செய்யப்பட்டதாக பிரபல நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி-யுமான மிமி சக்ரவர்த்தி, போங்கான் பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நயாகிராம் பகுதியில் உள்ள நயா கோபால் கஞ்ச் யுவக் சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மேடையில் அவர் பாடிக்கொண்டிருந்த போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தனக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று மின்னஞ்சல் மூலமாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மிமி சக்ரவர்த்தி அளித்துள்ள புகாரில், ‘நள்ளிரவு நேரத்தில் தன்மய் சாஸ்திரி என்பவர் திடீரென மேடைக்கு வந்து, பாடுவதை நிறுத்திவிட்டு கீழே இறங்குமாறு வற்புறுத்தினார். மேலும் மைக்கில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தினார். இதுகுறித்து அவதூறு வழக்கு தொடரப்போகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். மறுபுறம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘நடிகை 10.30 மணிக்கு வர வேண்டிய நிலையில், 11.45 மணிக்கு தாமதமாக வந்தார். மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால், போலீஸ் அனுமதியை நீட்டிக்க முடியவில்லை. அதனாலேயே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது’ என்று விளக்கம அளித்துள்ளனர். மேலும் நடிகையின் பாதுகாவலர்கள் பெண் நிர்வாகிகளிடம் அத்துமீறியதாகவும் எதிர் புகார் கூறப்பட்டுள்ளதால் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: