சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் கே.ஜே.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரித்து வெளியிட்ட படம், ‘மாயபிம்பம்’. இப்படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ், உடனே கே.ஜே.சுரேந்தர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என்பதால், ஆரம்பத்தில் சிறிது சந்தேகத்துடன் உட்கார்ந்து இருந்தேன். படம் ஓடியபோது அதில் முழுமையாக கவனம் செலுத்தினேன். இந்த படம் எனது இளமைக்கால நினைவுகளை மீட்டெடுத்தது. நான் தயாரித்த படங்களாகவே இருந்தாலும், மிகவும் அரிதாகவே சிரிப்பேன். ‘மாயபிம்பம்’ படத்தின் முதல் பகுதியில், நிறைய காட்சிகளில் நான் மனம்விட்டு சிரித்தேன். இரண்டாவது பகுதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளைமாக்ஸ் பார்த்து மிகவும் பாதிக்கப்பட்ட நான், உடனே கே.ஜே.சுரேந்தர் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தேன்’ என்றார்.
