இரண்டு மாமன்களும் தனது தந்தையை கொன்றதாக நினைத்து, அவர்களை பழிவாங்க காத்திருக்கிறார் உதய் தீப். இந்நிலையில், ஒரு மாமனின் மகளை அவர் தீவிரமாக காதலிக்கிறார். அப்போது ஒரு மாமன் லாரி விபத்தில் அகால மரணம் அடைகிறார். பிணம் வைக்கப்பட்ட துக்க வீட்டில் அனைவரும் தூங்கிவிட, திடீரென்று பிணம் காணாமல் போகிறது. அதன் பின் நடப்பதே படம். முதலில் வைத்திருந்த ‘சாவு வீடு’ என்ற தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ’சாவீ’ என்று மாற்றியுள்ளனர்.கதைக்கேற்ப இயல்பாக நடித்திருக்கிறார் உதய் தீப். ஆதேஷ் பாலாவுக்கு முழுநீள கேரக்டர்.
அதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் கவிதா சுரேஷ், யாசர், மாஸ்டர் அஜய், பிரேம் கே.சேஷாத்ரி உள்பட அனைவரும் நன்கு நடித்துள்ளனர். பிளாக் காமெடி ஜானருக்கு ஏற்ற ஒளிப்பதிவை பூபதி வெங்கடாசலம் வழங்கியுள்ளார். சரண் ராகவன், விஜே ரகுராம் ஆகியோர், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பிணம் காணாமல் போய்விட்டது என்ற கருவை வைத்துக்கொண்டு, போதை கலாச்சாரம் இன்றைய இளைய தலைமுறையை எப்படி சீரழிக்கிறது என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இயக்குனர் ஆண்டனி அஜித்துக்கு பாராட்டுகள். மெதுவாக நகரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.
