சென்னை: கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனரும், தயாரிப்பாளருமான மாரி செல்வராஜ் கூறுகையில், ‘அடுத்து நான் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்துக்கு பிறகு நாங்கள் இணையும் படம் இது. வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு வரலாற்று கதை கொண்ட படமாகும். முதல்முறையாக ஃபேண்டஸியுடன் கூடிய பொலிட்டிகல் ஜானரில் படத்தை உருவாக்குகிறேன்.
எனது திரையுலக பயணத்தில் இது மிகப்பெரிய படமாக இருக்கும். இதுவரை நான் எழுதி இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்: காளமாடன்’ ஆகிய படங்களில், ’வாழை’ படத்தை மட்டும்தான் அடுத்த பாகத்தை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. அதாவது, அப்படத்தை 6 பாகங்கள் வரை உருவாக்க முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கு எப்போதெல்லாம் இடைவேளை கிடைக்கிறதோ, அப்போது அப்படத்துக்கான பணியில் ஈடுபடுவேன். அது ஒரு ஆத்மார்த்தமான படம். எனது மிகப்பெரிய ஒப்பந்தங்களுக்கு இடையிடையே நேரம் கிடைக்கும்போது, ’வாழை’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளேன். முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.
