ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ், முன்னாள் உலக அழகியும் மற்றும் நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ராவை கடந்த 2018ல் காதல் திருமணம் செய்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான பிரியங்கா சோப்ராவுடன் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வரும் அவர், கடந்த 2022ல் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த மால்டி மேரி என்ற மகளுக்கு தந்தையானார். அமெரிக்காவில் வசித்தாலும், இந்து பண்டிகையை தவறாமல் கொண்டாடும் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ரா தம்பதிக்கு இந்தியாவின் மரபுகளும், சடங்குகளும் மிகவும் பிடிக்கும். இதுபற்றி நிக் ஜோனஸ் கூறுகையில், ‘முதல்முறை நான் இந்தியாவுக்கு வந்தபோது, பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டேன். அன்றே இந்தியாவுக்கும், எனக்குமான பிணைப்பு தொடங்கியது.
வாழ்க்கையில் எனக்கு பிடித்த சில நினைவுகள் இந்தியாவை சார்ந்தே இருக்கின்றன. இதுதான் என்னால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்து மதத்தின் மீது எனக்கு ஆழ்ந்த பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மாவின் நடைமுறை கோட்பாடு என்னை நிறைய பாதித்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லது நடக்கும்; கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்ற கோட்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய பண்டிகைகளும், மரபுகளும் எங்கள் வீட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. எங்களுடைய மகள் மால்டி மேரியை உண்மையான இந்து மதத்தின் நடைமுறைகளுடன் வளர்க்கிறோம். அதன் அர்த்தத்தை அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்கிறோம். பன்முக கலாச்சாரத்தை கொண்ட குடும்பத்தை கண்டுபிடித்தது, எனக்கான அதிர்ஷ்டம் என்று நம்புகிறேன்’ என்றார்.
