சென்னை: நீண்ட நாட்களாக காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் திருமணம், கடந்த 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமண தம்பதிகளான அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து, நேற்று நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி வைத்தனர்.
லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் உள்பட 22 நகரங்களுக்கு அவர்கள் இனிப்புகளை அனுப்பி வைத்தனர். மேலும், நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து நேற்று விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருந்த சோஷியல் மீடியா பதிவில், ‘இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.
எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவது, உண்மையிலேயே எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புடனும், உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, இன்று (நேற்று) எங்கள் வாழ்வின் இந்த பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை அனுப்பி வைக்கிறோம்.
நாடு முழுவதும் இருக்கும் முக்கிய கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆசியையும் எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி, வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
* 26 மில்லியன் லைக்குகளை கடந்தது
இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் டி20 உலக கோப்பை வெற்றி குறித்த பதிவை விட, இப்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு அதிக லைக்குகள் கிடைத்துள்ளது. விராட் கோலி பதிவிட்ட ஒரு போட்டோ 23 மில்லியன் லைக்குகளை கடந்துள்ள நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ள திருமண போட்டோ, இதுவரை 26 மில்லியன் லைக்குகளை கடந்து, ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய போட்டோ என்ற சாதனையை படைத்துள்ளது.
