சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், சூர்யா நடித்துள்ள 46வது படத்துக்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷ் நடித்த ‘வாத்தி’, ‘சார்’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன் நடித்துள்ளனர். முழுநீள ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கரா ஸ்டுடியோஸ் வழங்கும் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவர நாகவம்சி, சாயி சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
