மன்னிக்க மாட்டாயா...

இணைய தளங்களில் தங்களை யாரென்று உடனே அடையாளம் காண முடி யாது என்பதால் சில ரசிகர்கள் நடிகைகளை சகட்டு மேனிக்கு திட்டத் தொடங்கிவிடுகின்றனர். அதை சில நடிகைகள் கண்டுகொள்வதில்லை, இன்னும் சில நடிகைகள் பதிலடி தருகின்றனர். ஸ்ரீதேவியுடன் இங்லிஷ் விங்லிஷ், வைராஜா வை, இரும்பு குதிரை, அரிமா நம்பி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த்பற்றி ஒரு ரசிகர் சென்டிமென்டை டச் செய்யும்படியான ஒரு டுவிட் பகிர்ந்தார். ‘பிரியா ஆனந்த் இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்தார். எல்கேஜி படத்தில் ஜே.கே.ரித்திஷ் உடன் நடித்தார். இவர்கள் இருவருமே தற்போது உயிரோடு இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்டு மனம் நொந்தார் பிரியா ஆனந்த். ரசிகருக்கு பதிலடி தரவேண்டிய இடத்தில் அவர் பொறுமை யுடன் பதில் அளித்திருக்கிறார்.

‘பொதுவாக இதுபோன்ற நபர்களுக்கு பதில் அளிப்பதில்லை. ஆனால் நீங்கள் (ரசிகர்) கூறிய கருத்து ஒருவரின் மனதை எந்தளவுக்கு புண்படுத்தும் என நீங்கள் உணர வேண்டும். பதிலுக்கு உங்களை திட்டுவது அவமானப்படுத்துவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை’ எனக் கூறினார். பிரியாவின் இந்த பதிலை கண்ட ரசிகர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். ‘என்னுடைய தவறை நான் உணர்ந்துகொண்டேன். தயவு செய்து மன்னிக்கவும். இன்று நீங்கள் நடித்த எல்கேஜி, இங்லிஷ் விங்லிஷ் இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் பார்த்ததால் எனக்கு அப்படி தோன்றியது. அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். இந்த டுவிட்களை எல்லாம் படிக்க மாட்டீர்கள் என்று எண்ணினேன். என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் அந்த ரசிகர்.

Related Stories: