இறைவா.. நீ தாராளமாக வழங்குபவன்..!

திருக்குர்ஆன் மூன்றாம் அத்தியாயத்தில் மிகச் சிறிய, அழகான ஓர் இறைஞ்சுதல்(துஆ) உள்ளது.“எங்கள் இறைவனே, எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்துவிடாதே. மேலும் எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக. நிச்சயமாக, நீயே தாராளமாக வழங்குபவனாக இருக்கின்றாய்.” (3:8)இந்த இறைஞ்சுதலுக்கும், அதன் இறுதியில் உள்ள “இன்னக்க அன்தல் வஹ்ஹாப்-  “நிச்சயமாக நீயே தாராளமாக வழங்குபவன்” என்பதற்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது.

இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்யும் காரணிகள் என்ன?மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, புகழாசை, பதவியாசை என ஏகப்பட்ட காரணிகள் நேர்வழி பெற்ற இதயத்தைத் தடுமாறச் செய்துவிடும்.இறையச்சத்துடன் நேர்மையாகச் செயல்படும் ஓர் அரசு ஊழியரிடம், பெட்டி நிறைய பணத்தைத் திறந்து காட்டி, “இந்தப் பணம் முழுக்க உனக்குத்தான்...ஒரு கையெழுத்து மட்டும் போடு” என்றால் நிச்சயம் அவருடைய மனம் புயலில் சிக்கிய இறகு ஆகிவிடும். ஊசலாட்டம் தொடங்கிவிடும்.நேர்வழி இன்னதென்று தெரிந்த பின்பும்கூட அவருடைய இதயம் பிறழத் தொடங்கும். தள்ளாடும். தடுமாறும்.

மற்ற காரணிகளும் அப்படித்தான்.ஒரு நல்ல மனிதரிடம் பணம், பங்களா, கார், பெண், பட்டம், பதவி, புகழ் என்று எதைக் காட்டினால் அவர் வீழ்வாரோ அதைக் காட்டி அவரை வீழ்த்திவிட முயல்வார்கள். நேர்வழியிலிருந்து பிறழச் செய்ய  கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஷைத்தான் வலை விரிப்பான்.இத்தகைய சூழலில் இந்தப் பிரார்த்தனையை அதிகம் ஓத வேண்டும்.குறிப்பாக, “இன்னக்க அன்தல் வஹ்ஹாப்” எனும் திருவசனம் இதயத்தில் ஒளிரவேண்டும்.

“என் இறைவன் எனக்கு அருளியிருக்கும் நேர்வழிக்கு எதிரில் நீ கொட்டிக் குவிக்கும் பணமும் கட்டித் தருவதாய்ச் சொல்லும் வளமனையும்(பங்களாவும்) கால் தூசுக்குச் சமம். வாரி வழங்கும் உண்மையான வள்ளலான என் இறைவன் நாடினால் இதைவிட அதிகமாக எனக்குத் தரக்கூடும். நீ கிளம்பு” என்று சொல்லும் மனத்திண்மையை இந்த இறைஞ்சுதல் நமக்குக் கற்றுத் தருகிறது.இந்தப் பின்னணியில் மீண்டும் ஒருமுறை  அந்த துஆ- இறைஞ்சுதலை ஓதிப்பாருங்கள்.“எங்கள் இறைவனே, எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச்செய்துவிடாதே. மேலும் எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக. நிச்சயமாக, நீயே தாராளமாக வழங்குபவனாக இருக்கின்றாய்.” (3:8)அன்றாட வாழ்வோடு இந்த இறைஞ்சுதல் எந்த அளவு பின்னிப் பிணைந்துள்ளது என்பதுடன் ஒரு புதிய வெளிச்சமும் கிடைக்கிறதல்லவா?

- சிராஜுல்ஹஸன்

Related Stories: