இந்த வார விசேஷங்கள்

 16-4-2022 - சனிக்கிழமை - சித்ரா பௌர்ணமி - கள்ளழகர் வைகை எழுந்தருளல்

சித்திரை மாதத்தின் முழுநிலவு நாள். மாதங்களில் அமாவாசை விசேஷமாகக் கொண்டாடப்  படும். ஆனால், முழுநிலவு நாள், விசேஷமாகக் கொண்டாடப்படும் மாதம்.

சித்திரை மாதம்  சூரியன் மிக உச்சமாக முழு பலத்தோடு மேஷத்தில் பிரவேசிக்கும்போது, சூரியன் நீசம் அடையும் துலாராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் நேரம்தான் சித்ரா பௌர்ணமி.இது அற்புதமான வானியல் அமைப்பு. எனவே, விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாண்டு காலமாக தமிழகத்தில் வசந்தகாலத்தில் வரும் சித்ரா பௌர்ணமி விழாவை இந்திர விழா என்றும், வசந்த விழா என்றும் பெயர் சூட்டி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக பல தமிழ் இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இதற்கான பல கல்வெட்டுகளும் இருக்கின்றன. அன்றைக்கு மலைக் கோயில்களில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது. குறிப்பாக, அன்று மக்கள் பௌர்ணமி விரதம் இருப்பார்கள். எல்லா சிவாலயங்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். கால தேவனுடைய நாடாகிய எமலோகத்தில், ஒவ்வொருவருடைய பாவ புண்ணிய கணக்குகளையும்  எழுதும் சித்திரகுப்தன் அவதார தினமாக இந்த நாளை கொண் டாடுகின்றனர். அன்றைய தினம் அவரை வணங்கினால் ஒவ்வொரு வருடைய பாவம் கணக்குகளும் குறையும். சிலர் சித்ரகுப்தனின் திருமண நாள் என்றும் கொண்டாடுகின்றனர்.

சித்ரகுப்த பூஜையை பலரும் செய்கின்றனர். ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூசை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி விநாயகர் படத்தினை வைக்கின்றார்கள். அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். இவற்றோடு காய்கறிகள், மாங்காய், தேங்காய் பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். இந்த வழிபாட்டின்போது ‘‘சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ரகுப்தனை வழிபட வேண்டும். காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்தர் கோயிலில் விசேஷமான வழிபாடுகள் அன்றைக்கு நடைபெறும். சித்திரகுப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள். மிக முக்கியமாக அன்றைக்கு நீர்நிலைகளில் நீராடுவதும், ஏழைகளுக்கும், சாதுக்களுக்கும் அன்னதானம் செய்வதும் மிக உயர்ந்ததாகக்  கருதப்படுகிறது. அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்கள் கழியும்.  

17-4-2022 - ஞாயிறு - திருக்குறிப்பு தொண்டநாயனார் குருபூஜை

“ஒருவர் பணக்காரனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யாராக இருந்தாலும் கூட ஒரு சிவனடியாருக்குத் தொண்டு செய்பவர் சிவபெரு மானால் மிக உயரமான நிலைக்கு ஏற்றப்படுவார்” என்பதற்கு ஒரு உதாரணம் தான் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் வரலாறு. 63 நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் உள்ளத்தினை உணர்ந்து அவர்களுக்கு தொண்டு செய்து மேன்மை அடைந்தவர். அதனாலேயே இவருக்கு “திருக்குறிப்புத்தொண்ட நாயனார்” என்ற பெயர். காஞ்சிபுரத்தில் வண்ணார் (சலவைத் தொழில்) குலத்தில் தோன்றியவர். சிவனடியார்களின் துணியை வெளுத்துத்தருவதன் மூலம், தம்முடைய மனமும் வெளுக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்குத் தூய மனதோடு தொண்டு செய்தவர். அவருடைய உண்மையான அன்பின் பெருமையையும், பக்தியின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்த எண்ணினார், சிவபெருமான்.

ஒரு நல்ல மழைநாளில், ஒரு ஏழையைப் போல அழுக்கடைந்த கந்தைத்  துணியோடு அவரிடம்  வந்தார். அவரை திருக்குறிப்புத்தொண்டநாயனார் மிகுந்த அன்புடன் விழுந்து வணங்கினார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவர் போர்த்தியிருந்த  கந்தல் துணியை சலவை செய்து தருவதாகக்  கூறினார். அப்பொழுது அந்த அடியார், ‘‘ஐயா, என்னிடம் இருப்பது இந்த  ஒரு கந்தல் துணிதான். இந்த மழைநாளில் குளிருக்கு இதை நான் உடுத்திக்  கொண்டு இருக்கிறேன். இதனை நீர் உடனடியாக அழுக்கை நீக்கித்  தருவதாக இருந்தால் தருவேன்” என்று சொல்ல, நாயனார் “இன்று மாலைக்குள் வெளுத்து, உலர்த்தித் தருகிறேன்” என்று கூறி, பெற்றுக் கொண்டார்.குளத்தில் சென்று அதனைத் துவைக்கும்போது மழை பிடித்துக் கொண்டது. “இனி எப்படி நான் அவருக்கு இந்தத் துணியை திருப்பித் தருவேன்? அவர் பாவம், குளிரால் நடுங்குவாரே?” என்று மிகமிக வருந்தினார்.

 தான் மாலைக்குள் துவைத்துத் தருவதாக கூறிய வாக்கு பொய்த்து விட்டதே என்று நினைத்தார். வாக்கு பொய்யான பிறகு, இந்த மண்ணில், தான் உயிர் வாழ்வது சரியல்ல என்று நினைத்துக்கொண்டு, துணி துவைக்கும் கற் பாறையில் தன்னுடைய தலையை மோதச் செய்து சாவதற்குத் துணிந்தார். அப்படி அவர் சென்ற பொழுது, ஒரு திருக்கரம் அவருடைய தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது. இறைவன் உமையம்மையோடு காட்சி தந்தார். ‘‘உன்னுடைய அளவிலாத அன்பை இந்த அகிலத்திற்குப் பறைசாற்ற இப்படி ஒரு நாடகமாடினோம் . நீ வாழ்வாங்கு வாழ்ந்து, சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து, நம்முடைய திரு உலகை அடைவாய்”என்று திருவருள் புரிந்து மறைந்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில்

கொண்டாடப்படுகிறது.

“திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்”

- திருத் தொண்டத் தொகை

19-4-2022 - செவ்வாய்க் கிழமை - சங்கடஹர சதுர்த்தி

எல்லா விரதங்களும் ஒவ்வொரு சிறப்பு உடையதுதான் என்றாலும், விநாயகருக்கான மிகஎளிய, ஆனால், மிகவும் பலமுள்ள விரதம் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய நான்காவது நாள் சதுர்த்தி நாள். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.விநாயகப் பெருமானுக்கு எளிதான அறுகம்புல்லையும் உலர்ந்த பழங்களையும் வைத்து பூஜை செய்வதன் மூலமாக பாவங்கள் தொலையும். குடும்பத்தில் சுபிட்சம் தலைதூக்கும். சுபத்  தடைகள் விலகும். எண்ணிய காரியங்கள் வெற்றியாகும். உடலில் உள்ள நோய்கள் குணமடையும். ஆரோக்கியம் மேம்படும். நிலையான சந்தோஷம் கிடைக்கும். அறிவும், ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும். குறிப்பாக சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த விரதம் மிகுந்த நற்பலனைத் தரும். அன்று மாலை பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, பிள்ளையாரை வலம் வர வேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்யலாம், மோதகம், சித்ரா ன்னம், பால், தேன், பழவகைகள், சுண்டல் முதலியவற்றை விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம். வளர்பிறை சதுர்த்தி நாளில் இந்த பூஜையை முடித்துவிட்டு வானத்தில் சந்திரனைப் பார்ப்பது விசேஷமானது.

22-4-2022  வெள்ளிக்கிழமை - சஷ்டி

விரதங்களில் மிகச் சிறப்புடைய விரதம் சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற ஆறாவது திதி சஷ்டி திதி. முருகனுக்கு உரியது. அன்றைய தினம் காலை முதல் சாப்பிடாமல் உபவாசம் இருந்து, முருகனை வணங்கி வழிபட்டு, முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்து, விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.  தொடர்ச்சியாக சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு தளர்ச்சியில்லாத  தன்னம்பிக்கையும், வாழ்வில் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு சஷ்டி விரதம் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை மக்க ளிடத்திலே இருக்கிறது. சட்டி (ஷ்டி)யில் இருந்தால் அகப்பையில் வரும் என்று சொல்லுவார்கள். கரு உருவாகாமல் பலவிதமான உடல் பிரச்னையால் தவிப்பவர்களுக்கு, இந்த கந்த சஷ்டி விரதம் மிக மிக பயனுள்ள விரதமாகப்  பரிந்துரைக்கப்படுகிறது.

Related Stories: